கார் வாங்க இதுவே சரியான தருணம்...ரூ.55,000 வரை சலுகை

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை பல்வேறு நிறுவனங்கள் உயர்த்தின. இருப்பினும், ஜனவரி மாதத்தில் கார் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்து கார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தை அளித்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரியிலும் கார் விற்பனை அமோகமாக நடந்தது. மத்திய பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டால் கார் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தால், கார் விற்பனை வெகுவாக அதிகரித்தது. இதனால், முன்னணி கார் நிறுவனங்களின் டீலர்கள் அதிகளவில் கார்களை வாங்கி ஸ்டாக் வைத்தனர்.
பிப்ரவரியில் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டபோதிலும், டீலர்களில் அதிகளவில் கார்கள் ஸ்டாக் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 31ந் தேதியுடன் இந்த நிதியாண்டு முடிவதால், டீலர்களில் உள்ள கார்களை விற்பனை செய்ய பல முன்னணி நிறுவனங்கள் ரூ.55,000 வரை சலுகைகளை வழங்குவதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாருதி நிறுவனம் ஆல்ட்டோ K10 காருக்கு 30,000ரூபாயும், ஏ-ஸ்டார் மற்றும் வேகன் ஆர் காருக்கு 35,000 ரூபாயும் வழங்குவதாகவும், SX4 செடான் காருக்கு அதிகபட்சமாக ரூ.40,000 விலையில் தள்ளுபடி வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகை உள்பட அதிகபட்சம் ரூ.55,000 வரை ஹோண்டா சலுகை வழங்குவதாக டீலர் ஒருவர் தெரிவித்தார். இதேபோன்று, ஸ்டாக்குகளை தீர்க்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனமும் ரூ.45,000 வரை கார் விலையில் தள்ளுபடி வழங்குவதாகவும் டீலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








