கார்களின் எடையை 15% குறைக்க நிசான் முடிவு

இதன்மூலம், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த கார்பன் புகை வெளியிடும் அடுத்த தலைமுறை கார்களை தயாரிக்கும் முயற்சிக்கு அந்த நிறுவனம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
எடை குறைந்த கார்களை தயாரிக்கும் முயற்சிகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளாமல் இல்லை. சில ஸ்போர்ட்ஸ் ரக கார்களிலும், சொகுசு கார்களிலும் ஸ்டீலுக்கு பதில் இலகு எடையும், அதிக உறுதித்தன்மையும் கொண்ட கார்பன் ஃபைபரால் ஆன பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், ஸ்டீலை விட கார்பன் பைபரின் விலை பன்மடங்கு கூடுதல் என்பதால், சாதாரண ரக கார்களில் கார்பன் ஃபைபரை பயன்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கார் தயாரிப்பு நிறுவனங்கள் கருதுகின்றன.
இந்த நிலையில், சிறிய எஞ்சின், இலகு எடை கொண்ட உதிரிபாகங்களை பயன்படுத்தி தனது அனைத்து கார்களின் எடையையும் கணிசமாக குறைக்கும் முயற்சியை நிசான் துவங்கியுள்ளது.
இலகு எடை கொண்ட முதல் காரை அமெரிக்கா சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது.
நிசான் சன்னி அல்லது நிசான் வெர்சா கார்களில் ஒன்று நிசானின் முதல் இலகு எடை கொண்ட காராக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய சன்னி காரில் பொருத்தப்பட்ட 1.8 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக தற்போது புது மாடல் சன்னி காரில் 1.6 லிட்டர் எஞ்சினை பொருத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்கள் இலகு எடை கொண்டதாக இருக்கும் வகையில் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, குறைந்த எடை கொண்ட பொருட்களை பயன்படுத்தியுள்ளதால், காரின் பாதுகாப்பு விஷயங்களில் எந்த குறையும் இருக்காது என்று நிசான் உறுதி கூறியுள்ளது.
இதேபோன்று, அடுத்து வர இருக்கும் தனது அனைத்து கார்களையும் எடையை கணிசமாக குறைத்து மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும் முயற்சிகளை நிசான் மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








