ரூ.60 லட்சத்தில் குண்டு துளைக்காத கார்:டாடா அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மாடல் பல்வேறு தரப்பினரின் மனம் கவர்ந்த எஸ்யூவீ காராக திகழ்கிறது. அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் ஆகியோர் இந்த காரை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து பாதுகாப்புகளும் நிறைந்த சஃபாரி மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் ஏற்கனவே பாதுகாப்புப் படையினருக்கு டாடா மோட்டார்ஸ் சப்ளை செய்துள்ளது. இருப்பினும், தற்போது முதன்முறையாக சந்தையில் குண்டுதுளைக்காத சஃபாரி கிடைக்க உள்ளது. சாதாரண சஃபாரிக்கும் காருக்கும், குண்டு துளைக்காத சஃபாரி காருக்கும் வெளிப்புற தோற்றத்தில் வித்தியாசம் இல்லை.
ஆனால், குண்டு துளைக்காத சஃபாரி காரில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. ஏகே-47 ரக எந்திர துப்பாக்கியால் சுட்டாலும், காருக்குள் இருப்பவருக்கும், காருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெட்ரோல் டேங்கில் பிரத்யேக பூச்சு பூசப்பட்டுள்ளதால் குண்டு வெடிப்பில் சிக்க நேர்ந்தாலும் கார் தீப்பிடிக்காது.
இந்த கார் அதிகபட்சமாக 150 கி.மீ., வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. துப்பாக்கி குண்டுகள் துளைத்தாலும், காரின் டயர்களில் காற்று இல்லா விட்டாலும் 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் 50 கி.மீ., வரை செல்ல முடியும்.
இந்த காரின் விலை அதிகம் என்பதால், ஒரு சில டீலர்களில் மட்டுமே ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கார் தேவைப்படுவோர் அருகில் உள்ள டீலர்களில் ஆர்டர் செய்தால், நேரடியாக கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
B6 பாதுகாப்பு தரத்தில், ரூ.60 லட்சம் விலையில் வந்துள்ள இந்த கார் சந்தையில் மிகக்குறைந்த விலை கொண்ட குண்டு துளைக்காத காராக கூறப்படுகிறது. B6 பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட லேண்ட் ரோவர் கார்களை ரூ.4 கோடி விலையில் கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








