விற்பனை சந்தையில் சொந்த காலில் நிற்க ஃபியட் முடிவு

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம்,தனது தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.இதற்காக,கடந்த 2007ம் ஆண்டு ஃபியட்-டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து,நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்களில்,ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.மேலும்,இரு நிறுவனங்களும் பரஸ்பரம் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,இந்திய சந்தையில் அனைத்து நிறுவனங்களின் கார் விற்பனையும்,வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில்,ஃபியட் நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து சரிவுப் பாதையில் செல்கிறது.இதனால்,அதிருப்தியடைந்த ஃபியட் நிறுவனம்,டாடா கூட்டணியிலிருந்து விலகி விற்பனையில் தனித்து ஈடுபட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஃபியட் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு துணை தலைவர் கூறியதாவது:
"நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதங்களுக்கு இடையிலான காலத்தில் 17,840 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 20,280 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதை,ஒப்பிடுகையில் விற்பனையில் 12.03சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே,விற்பனையில் முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்.டாடாவுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகி தனித்து செயல்பட உள்ளோம்.
டெல்லி மற்றும் புனேயில் ஃபியட் கார்களுக்கு தனி ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளது.மேலும்,டாடா ஷோரூம்களிலும் ஃபியட் கார் விற்பனை தொடரும்.அதேவேளை,டாடா மோட்டார்சில் விற்பனை தொடர்ந்தாலும்,விற்பனையில் ஃபியட் தனித்து செயல்படும்.விற்பனையை உயர்த்துவது ஒன்றே எங்கள் குறிக்கோள்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








