இந்த ஆண்டு மத்தியில் மினிடிரக் உற்பத்தி துவங்கும்:அசோக் லேலண்டு

கனரக வாகன தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான அசோக் லேலண்டு இலகு ரக சரக்கு வாகன(எல்.சி.வி.,) தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தது. இதற்காக, ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்துடன் இணைந்து அசோக் லேலண்டு-நிசான் கூட்டு குழுமத்தை உருவாக்கியது.
சென்னைக்கு அருகில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்க இந்நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தொழிற்சாலை அமைக்கும் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு மத்தியிலிருந்து ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் மினி டிரக் உற்பத்தியை துவங்க இருப்பதாக அசோக் லேலண்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்டு இயக்குனர் கூறியதாவது:
"ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் மினி டிரக் உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். கூட்டு குழுமத்தின் மூலம் மினிடிரக், மினிவேன் மற்றும் டிரக்குகளை அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்காக, அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1,200 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறோம்.
ஓசூர் தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மினிடிரக்குகள் தயாரிக்க முடியும். மேலும், திரும்பெரும்புதூரில் 380 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள புதிய தொழிற்சாலை செயல்பட துவங்கியவுடன் ஆண்டுக்கு மொத்தத்தில் 1.90 லட்சம் மினிடிரக்குகள் வரை தயாரிக்கலாம்.
உள்நாடு சந்தை மட்டுமின்றி, ஆசிய நாடுகளுக்கும் மினிடிரக்குகளை ஏற்றுமதி செய்ய திட்டம் வைத்துள்ளோம். திரும்பெரும்புதூரில் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








