இளம் ஆட்டோமொபைல் எஞ்சினியர்களுக்கான கார் வடிவமைப்பு போட்டி

இந்திய கார் சந்தையின் அசுரவேக வளர்ச்சியால், ஆட்டோமொபைல் துறைக்கு எஞ்சினியர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு, திறமைமிக்க இளம் ஆட்டோமொபைல் எஞ்சினியர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையிலும் சுப்ரா எஸ்ஏஇ என்ற பிரம்மாண்ட பார்முலா ஒன் ஸ்போர்ட்ஸ் கார் வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியை மாருதி சுஸுகி நிறுவனமும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆட்டோமொபைல் எஞ்சினியர்கள் சங்கமும் இணைந்து நடத்த உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நேற்று நடந்த விழாவில் கையெழுத்தானது.
மாருதி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைமை பொதுமேலாளர் சஷாங்க் வத்சவாவும், சுப்ரா எஸ்ஏஇ இந்தியா நிறுவனத்தின் தலைவர் சுமந்திரனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் எஞ்சினியர்கள் 44 குழுக்களாக பிரிந்து பார்முலா ஒன் காரை வடிவமைக்க உள்ளனர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் வடிவமைக்கும் பார்முலா ஒன் கார்கள் சென்னை மோட்டார்கிளப் சோதனை ஓட்டமையத்தில் சோதனை நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் சிறந்த கார் சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் கார் கண்காட்சி மற்றும் 2012ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெறும் அரிய வாய்ப்பை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகியின் விற்பனைப் பிரிவு தலைவர் கூறியதாவது:
" இந்த போட்டி நிச்சயம் இளம் ஆட்டோமொபைல் எஞ்சினியர்களுக்கு அரிய வாய்ப்பையும், கார் தயாரிப்பபுக்கான நேரடி அனுபவத்தையும் தரும். இதுபோன்ற போட்டிகளுக்கு மாருதி சுஸுகி உறுதுணையாக இருக்கும்.
மேலும், இளம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிய வடிவமைப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் புதிதாக 500 எஞ்சினியர்களை பணிக்கு அமர்த்த உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








