ஃபியட்டிடமிருந்து டீசல் எஞ்சின் சப்ளையை பெற மாருதி முடிவு

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், டீசல் கார்களுக்கு மார்க்கெட்டில் கணிசமாக தேவை அதிகரித்து வருகிறது. இதை கவனத்தில்க்கொண்டு, டீசல் கார் ஏற்றுமதியை அடுத்த ஆறு மாதங்களுக்கு வெகுவாக குறைத்துள்ளது மாருதி.
இந்த நிலையில், டீசல் கார்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ஃபியட் நிறுவனத்திடமிருந்து அதிக அளவில் டீசல் எஞ்சின்களின் சப்ளையை நேரடியாக பெற மாருதி முடிவு செய்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை உற்பத்தி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை மாருதி பெற்றுள்ளது. இதன்மூலம், தனது மானேசர் ஆலையில் ஃபியட் டீசல் எஞ்சின்களை மாருதி உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், தேவையை சமாளிக்கும் விதமாக அனைத்து மாடல்களுக்கும் ஏற்ற அனைத்து வகையான டீசல் எஞ்சின்களையும் அதிக அளவில் ஃபியட்டிடமிருந்து பெற மாருதி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஃபியட் டீசல் எஞ்சின்களின் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு பணிகளை மாருதி எஞ்சினியர்கள் முடித்துவிட்டனர்.
எனவே, விரைவில் ஃபியட்- மாருதி இடையில் டீசல் எஞ்சின் சப்ளை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் ஸ்விப்ட், ரிட்ஸ், டிசையர் மற்றும் எஸ்எக்ஸ்-4 உள்ளிட்ட மாருதி கார்களில் 85 சதவீதம் டீசல் மாடல்களே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








