சொன்னபடி தேர்தலை புறக்கணித்த மாருதி தொழிலாளர்கள்!

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
மானேசர் தொழிற்சாலைக்கென தனி தொழிற்சங்கத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தர மாருதி நிர்வாகம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. இதனால்,இருதரப்புக்குமிடையில் சுமூகமான சூழ்நிலை நிலவவில்லை.
இந்த நிலையில், மாருதியின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், குர்கான் மற்றும் மானேசரில் உள்ள தொழிற்சாலைகளில் தேர்தல் நடைபெறும் என்று மாருதி அறிவித்திருந்தது. ஆனால், இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மானேசர் ஆலையின் புதிய தொழிற்சங்கமான மாருதி எம்ப்ளாயீஸ் யூனியன் அறிவித்தது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தொழிற்சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டபடி நடந்தது. இதில், மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். தேர்தல் நடந்தபோது மானேசர் ஆலையில் பதட்டமான சூழ்நிலை தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி நிறுவனத்தில் மொத்தம் 10,000 பேர் நிரந்தர ஊழியர்களாக பணிபுரிகின்றனர். இதில், சுமார் 85 சதவீதத்தினர் அதன் குர்கான் மற்றும் மானேசர் தொழிற்சாலைகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








