பெட்ரோல் விலை; கார் கடன் வட்டி உயர்வு: அதிர்ச்சியில் கார் நிறுவனங்கள்

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கார் கடனுக்கான வட்டி அடிக்கடி உயர்த்தப்பட்டதாலும், கடந்த சில மாதங்களாகவே கார் விற்பனை மந்தமாக உள்ளது. விற்பனையை அதிகரிக்க கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தும் அதற்கு போதிய பலன் கிட்டவில்லை. கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.
வரும் பண்டிகை காலத்திலாவது கார் விற்பனை ஏற்றம் பெறும் என்று கார் நிறுவனங்கள் கனவு கண்டுகொண்டிருந்தன. இதனால், புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் கார் நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விலை திடீரென லிட்டருக்கு ரூ. 3.14 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கார் விற்பனை மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் கார் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்தன.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு கார் நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வங்கிகளுக்கான கடன் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி திடீரென உயர்த்தியுள்ளது.
இதையடுத்து, வீடு, மற்றும் கார் உள்ளிட்ட வாகன கடனுக்கான வட்டி வீதத்தை விரைவில் உயர்த்த வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், நம் நாட்டில் 70 சதவீத கார்கள் கடன் திட்டங்கள் மூலமே விற்பனையாகின்றன. இந்த நிலையில், கார் கடன் வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டால் கார் விற்பனையில் மேலும் பலத்த அடி விழும் என்று கருதப்படுகிறது.
இதனால், வரும் பண்டிகை காலத்தில் கார் விற்பனை ஏற்றம் பெறும் என்ற கார் நிறுவனங்களின் கனவு சுக்குநூறாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








