விற்பனையில் உலகின் நம்பர்-1 இடத்தை பிடிக்க வோக்ஸ்வேகன் திட்டம்

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் ஐரோப்பிய கார் சந்தையில் நம்பர்-1 இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கார் விற்பனையில் உலகின் முதல் இடத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டோ நிறுவனங்களை பின்னுக்குத் தள்ள வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
வரும் 2018ம் ஆண்டில் உலகின் நம்பர்-1 கார் நிறுவனமாக மாறுவதற்கு இலக்கு வைத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய கார்களை அறிமுகம் செய்யவும், பல பில்லியன் டாலர் முதலீட்டில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் வோக்ஸ்வேகன் ஆயத்தமாகிவிட்டது.
ஆண்டுக்கு 10 மில்லியன் கார்களை விற்கும் திட்டத்தோடு தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது வோக்ஸ்வேகன். இதுகுறித்து வோக்ஸ்வேகன் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் விண்டர்கோர்ன் கூறுகையில்," பல்வேறு நாடுகளில் கார் விற்பனையை பன்மடங்கு உயர்த்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தயுள்ளோம். இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகிறோம். இதன்மூலம், உலகின் பெரிய கார் நிறுவனம் என்ற இடத்தை அடைய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
சுஸுகி நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் மூலம் சிறிய கார் தயாரிப்பில் ஈடுபட வோக்ஸ்வேகன் திட்டமிட்டிருந்தது. ஆனால், சுஸுகியுடனான கூட்டு முறிந்துவிடும் சூழலில் உள்ளதால், தனது சொந்த தயாரிப்பில் சிறிய கார்களை தொடர்ந்து தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வோக்ஸ்வேகன் மட்டுமின்றி, அதன் துணை நிறுவனங்களான ஆடி, ஸ்கோடா, பென்ட்லீ, புகாட்டி, ஸ்கேனியா, போர்ஷே ஆகிய கார் நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளிலும் அதிக முதலீடுகளை செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








