இரண்டு இயக்குனர்கள் அடுத்தடுத்து விலகல்?-நெருக்கடியில் வோக்ஸ்வேகன்

வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் துணைத் தலைவராக கே.கே.ஸ்வாமி பதவி வகித்து வருகிறார். டொயோட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக பத்து ஆண்டுகள் பணிபுரிந்த ஸ்வாமி, கடந்த 2008ம் ஆண்டு வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் பொறுப்பேற்றார்.
ஆட்டோமொபைல் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்தவர். கடந்த 1997 ம் ஆண்டு பெங்களுரில் டொயோட்டோ கார் தொழிற்சாலை அமைப்பதில், முக்கிய காரணகர்த்தாவாகவும் விளங்கினார்.
இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பொறுப்பேற்று சில ஆண்டுகளே ஆன நிலையில், ஸ்வாமி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கடந்த ஆண்டே ஸ்வாமி, தனது ராஜினாமா கடிதத்தை நிர்வாகத்திடன் கொடுத்துவிட்டதார். ராஜினாமா கடிதத்தில் பதவி விலகுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டு இறுதியில் பொறுப்புகளிலிருந்து அவர் விலகுவார்," என்று கூறினார்.
ஸ்வாமியை தொடர்ந்து வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மற்றொரு மேலாண் இயக்குனரான மஹம் தாலிவாலும், பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிவால் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்து வோக்ஸ்வேகன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜெட்டா காரை பிரபலபடுத்தியதில் தாலிவாலுக்கு முக்கிய பங்கு உண்டு.
வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கு தக்கவாறு, தனது செயல்பாடுகளை தீவீரப்படுத்தி வருகிறது வோக்ஸ்வேகன். இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு மேலாண் இயக்குனர்கள் பதவி விலக இருப்பது அந்நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
வோக்ஸ்வேகனின் ஓர் அங்கமாக செயல்படும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்த இம்ரான் ஹசன், நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2006ம் ஆண்டு பதவி விலகினார். அவரை வோக்ஸ்வேகன் நிறுவனம் வலுக்கட்டாயமாக பதவி விலக செய்ததாக பின்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








