வரும் நவம்பரில் புத்தம் புதிய சிட்டியை களமிறக்குகிறது ஹோண்டா

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் அசைக்க முடியாத இடத்தை ஹோண்டா சிட்டி கார் பிடித்து வைத்துள்ளது. மார்க்கெட்டில் புத்தம் புதிய மாடல்கள் வந்தாலும் ஹோண்டா சிட்டிக்கு உள்ள மவுசு குறையவில்லை.
எனவே, சிட்டியை அவ்வப்போது மெருகூட்டி அறிமுகம் செய்வதில் ஹோண்டா மறப்பதில்லை. இந்த நிலையில், வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எண்ணற்ற மாற்றங்களுடன் புதிய சிட்டி காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்கிறது ஹோண்டா.
இந்த புதிய ஹோண்டா சிட்டி கார் ஏற்கனவே தாய்லாந்தில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
இதைத்தொடர்ந்து, வரும் நவம்பரில் இந்திய சந்தையில் இந்த காரை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகப்பு விளக்குகள், டேஞ்சர் விளக்குகள் ஆகியவை குரோம் பூச்சுடன் இதுவரை கண்டிராத வடிவமைப்புடனும் இருப்பது ஹோண்டா சிட்டி மீதான ஆர்வத்தை தற்போதே தூண்டுகிறது. மேலும், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட வெளிப்புற வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை கட்டிப்போடும் என்று கூறிவிட முடிகிறது.
மேம்படுத்ப்பட்ட மாடலாக வரும் புதிய ஹோண்டா சிட்டி மார்க்கெட்டில் தலைதூக்கி வரும் வோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு ஆல் நியூ பியஸ்ட்டா கார்களின் மார்க்கெட்டை நிச்சயம் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








