அதே விலையில் கூடுதல் அம்சங்களுடன் புதிய நானோ: டாடா அறிமுகம்

மார்க்கெட்டில் குறைந்த விலை காரான நானோ இதுவரை விற்பனையில் எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கையும் அடையவில்லை. நானோவின் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இதன் ஒரு படியாக நானோவை கூடுதல் சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது டாடா. புதிய நானோ காரின் எஞ்சின் தற்போது ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதால் அதிக பிக்கப்பையும், லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ்(முன்பு லிட்டருக்கு 23.6 கிமீ மைலேஜ்) தரும் என டாடா தெரிவித்துள்ளது.
முன்பு 35 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்ட நானோவின் எஞ்சின் தற்போது ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதால் 38 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. இது 48என்எம் முதல் 51 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.
புதிய நானோவின் ஏசியும் முன்பைவிட அதிக சக்திகொண்டதாக இருக்கும். இதனால், கேபின் விரைவாக குளிர்ச்சியாகிவிடும். மேலும், புதிய நானோவின் முக்கிய அம்சமே இந்தியாவின் மிகக்குறைந்த கார்பன் புகையை வெளியிடும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
புதிய நானோ ஒரு கிமீ.,க்கு 92.7கிராம் கார்பன் புகையை மட்டுமே வெளியிடம் என டாடா தெரிவித்துள்ளது. இது அதிகபட்சம் தற்போது மணிக்கு 105 கிமீ வேகம் வரை செல்லும் திறனை கொண்டிருக்கும்.
புதிய சஸ்பென்ஷன்கள் பொருத்தப்பட்டிருப்பதால் கையாளுமை மற்றும் ரைடிங் குவாலிட்டி சிறப்பாக இருக்கும். தவிர, ஸ்டீயரிங்கும் தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் கண்டுள்ளதால் டிரைவிங்கில் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.
பாதுகாப்பு அம்சங்களில் குறை இருக்காது கூடாது என்பதற்காக பேஸ் வேரியண்ட் நானோ காரிலும் பூஸ்டர் அசிஸ்ட் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முன்பு மிட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே பூஸ்டர் அசிஸ்ட் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
புதிய நானோ அறிமுகம் குறித்து இந்திய விவகாரங்களுக்கான டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கூறுகையில்," நானோ காரை வைத்துள்ள 90 சதவீத வாடிக்கையாளர்கள் மிகுந்த தெரிவித்துள்ளனர். நானோவை மிகச் சரியாக தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் புதிய நானோவை மேம்படுத்தியுள்ளோம். நானோவில் புதிய வசதிகளை புகுத்துவது தொடரும்," என்றார்.
வாடிக்கையாளர்களின் கற்பனைகளையும், எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பியர்ல் ஒயிட், ரஃப் ரெட், அக்வா புளூ, நியோன் ரஷ், செரீனே ஒயிட், மிட்டியோர் சில்வர், மோஜிட்டோ கிரின், பப்பாயா ஆரஞ்ச், சன்ஷைன் யெல்லோ மற்றும் சாம்னி கோல்டு கலர்களில் நானோ வந்துள்ளது. இதிலுள்ள மொத்தம் 10 கலர்களில் 8 கலர்கள் புதியது என்பது குறிப்பிடத்தக்கது.
10 கலர்களில் புதிய நானோவை காண இங்கே கிளிக் செய்யும்.


Click it and Unblock the Notifications








