ஸ்டிரைக் எதிரொலி: மாருதி கார் டெலிவிரியில் தாமதம்

புதிய தொழிற்சங்க அமைக்க ஒப்புதல் வழங்ககோரி, ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் 13 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாள் ஒன்றுக்கு 1,200 கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த அந்த தொழிற்சாலையில், 13 நாட்கள் நடந்த வேலைநிறுத்தத்தால் 12,600 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டது.
மாநில அரசின் தலையீட்டின் பேரில் இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டாலும், அந்த போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு மாருதி நிறுவனத்தை விட்ட பாடில்லை.
வருவாய் இழப்பு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவிரி கொடுப்பதிலும் அந்த நிறுவனத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உற்பத்தி இழப்பு காரணமாக கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் கார்களை டெலிவிரி கொடுக்க முடியாத நிலையில் மாருதி உள்ளது.
ஸ்விப்ட், எஸ்எக்ஸ்4, ஏ-ஸ்டார் கார்களை புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தது 2 மாதங்களாக காத்திருக்குமாறு மாருதி டீலர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், டீலர்களில் உள்ள ஸ்டாக்கை பொறுத்து டெலிவிரியில் ஏற்படும் காலதாமதத்தில் மாறுபாடு இருக்கலாம் என டீலர்கள் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தம் நடந்த மானேசர் தொழிற்சாலையில் அந்த நிறுவனம் ஏ-ஸ்டார், ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர், எஸ்எக்ஸ்4 ஆகிய கார்களை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








