இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வரும் ரேஞ்ச் ரோவர் இவோக்

டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் வந்தபின் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், டாடாவின் உறுதுணையுடன் இந்திய சந்தையிலும் வலுவான இடத்தை பெற லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ளது.
இதற்காக, உலகப்புகழ்வாய்ந்த எஸ்யூவி மாடல்களில் ஒன்றான தனது ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளது.
மூன்று கதவுகள் கொண்ட கூபே மாடல் மற்றும் 5 கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் எஸ்யூவி என இரண்டு மாடல்களில் இவோக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதில், கூபே மாடல் ரேஞ்ச் ரோவர் 237 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனும், எஸ்யூவி மாடலில் 187 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட 2.2 லிட்டர் காமன் ரயில் டர்போ டீசல் எஞ்சின் கொண்டதாகவும் அறிமுகம் செய்ய உள்ளது.
இரண்டு மாடல்களும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாகவும், 4 வீல் டிரைவ் கொண்டதாகவும் இருக்கும். இதன் ஆரம்ப ரக பியூர் மாடலில் குரூஸ் கன்ட்ரோல், பிக்ஸ்டு பனோரமிக் ரூப், ஸினான் ஹேட்லேம்ப், 17 இஞ்ச் அலாய் வீல், கீலேஸ் என்ட்ரி, கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இருக்கும்.
லெதர் இருக்கைகள், டச் ஸ்கிரீன் ஆடியோ, புளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் 11 ஸ்பீக்கர்களை கொண்ட மெரிடியன் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் உண்டு. எந்தவொரு சாலையாக இருந்தாலும் தொடைதட்டி செல்லும் திறன் வாயந்த இந்த ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரூ.49 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக லேண்ட் ரோவர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








