நானோ கார் விற்பனையை அதிகரிக்க நேரில் களமிறங்கியுள்ள ரத்தன் டாடா

டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா கனவு காரான நானோ பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கார் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்ட நாள்முதல் நானோ பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நானோ காரின் விற்பனை மோசமாகியுள்ளது. மாதத்திற்கு 10,000 நானோ கார்களை விற்றால்தான் உற்பத்தி செலவீனங்களை சமாளித்து நானோவை குறைந்த விலையில் விற்க முடியும்.
ஆனால், கடந்த 12 மாதங்களில் ஒரே ஒரு மாதம்தான் 10,000 என்ற விற்பனை இலக்கை நானோ கடந்துள்ளது. இதனால், டாடா மோட்டார்ஸ் பெரும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில், நானோவின் விற்பனை அதிகரிக்க நேரில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா.
பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களுக்கு விசிட் அடித்த அவர், டீலர்களிடம் நானோ கார் விற்பனையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடு்க்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், நானோ கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நேரில் சாவியை வழங்கி அவர்களை ஆச்சயரித்தில் ஆழ்த்தினார்.
இதுகுறித்து பாட்னாவிலுள்ள டாடா ஷோரூம் உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,"எங்களது ஷோரூமுக்கு டாடா வருகை தந்தது மறக்க முடியாதது. எங்களுக்கு அவர் கூறிய கருத்துக்கள் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. தவிர, திடீரென நானோ வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரில் சாவியை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்," என்றார்.


Click it and Unblock the Notifications








