தொழில்நுட்பக்கோளாறு வாகனங்களுக்கு இனி அரசாங்கமே ரீகால்!

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு தக்கவாறு தொழில்நுட்பக்கோளாறு கொண்ட வாகனங்கள் தொடர்பான புகார்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தவண்ணம் உள்ளன.
முறையான பாதுகாப்பு விதிமுறைகளை வாகன தயாரிப்பாளர்கள் கடைபிடிக்காததால் இதுபோன்ற வாகனங்கள் மார்க்கெட்டில் அதிகரித்து வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையில் இழப்பையும், மன உளைச்சலையும சந்திக்க நேரிடுகிறது.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் விற்கப்படும் கார்களில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரியவந்தால், அந்நாட்டு தேசிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கார் நிறுவனங்களின் அனுமதியில்லாமலே திரும்பபெறும அறிவிப்பை வெளியிட்டுவிடும்.
இதேபோன்று, நம் நாட்டில் அதிகரித்து வரும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய தேசிய வாகன வாரியத்தை அமைக்க மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக வாகனங்கள் தீப்பிடித்தல், ஏர்பேக்குகள் சரிவர வேலை செய்யாதது உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்னைகள் கொண்ட வாகனங்களை ஆய்வு செய்து தன்னிச்சையாக திரும்பபெறும் அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் கொண்டதாக தேசிய வாகன வாரியம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய கனரக தொழிற்துறை அமைச்சக இணைச்செயலாளர் அம்புஜ் சர்மா கூறியதாவது:
"அடுத்த சில ஆண்டுகளில் வாகன தயாரிப்புத்துறை மிகப்பெரிய அளவு வளரும் நிலை உள்ளது.இதற்காக, ஆட்டோமொபைல் துறையின் அனைத்து பிரச்னைகளையும் களையும் விதத்தில் புதிய ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
வாகனங்களின் கட்டுமானத் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் கிராஷ் டெஸ்ட், வாகனங்களுக்கு பாதுகாப்புக்கான நட்சத்திர அந்தஸ்துக்கான தர நிலையை நிர்ணயிப்பது மற்றும் எதிர்கால பாதுகாப்பு அம்சங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது ஆகிய பணிகளை புதிதாக அமைக்கப்பட இருக்கும் தேசிய வாகன வாரியம் மேற்கொள்ளும்," என்று தெரிவித்தார்.
இந்த புதிய ஆணையம் அமைக்கப்பட்டால், வாகன தயாரிப்பில் இனி நிறுவனங்கள் கவனக்குறைவாக செயல்படுவது தடுக்கப்படும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்க்கவும், தீர்வு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








