கார் உற்பத்தியை இருமடங்காக உயர்த்துகிறது நிசான்

கார் மார்க்கெட்டில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கும் விதத்தில் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த நிசான் கார் நிறுவனம். பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை அருகே ஒரகடத்தில் ரூ.4,500 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைத்தது நிசான்.
ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் தற்போது மைக்ரா மற்றும் சன்னி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தேவையை கருத்தில்க்கொண்டு கார் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தவும், டீலர்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிசான் இந்தியா நிர்வாக இயக்குனர் கிமினோபு தொகுயாமா கூறுகையில்,"புதிய மாடல்கள் அறிமுகம் மூலம் இந்திய சந்தையில் ஏற்படும் தேவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதைத்தொடர்ந்து,கார் உற்பத்தியை அடுத்த ஆண்டிலிருந்து 4 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்," என்றார்.
மேலும், புதிய டீலர்களை நியமிக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது. வரும் 2013ம் ஆண்டிற்குள் டீலர் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க அந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








