இந்திய கார்களை வாங்க விரும்பாத அமெரிக்கர்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விரைவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் நானோ காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று, பல இந்திய கார் நிறுவனங்கள் அமெரிக்க சந்தையை குறிவைத்து காய்நகர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கர்கள் இந்திய காரை வாங்குவதற்கு விரும்பவில்லை என்று சர்வே முடிவு ஒன்று கூறி இந்திய நிறுவனங்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ஆட்டோமொபைல் மார்க்கெட் நிலவர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஜிஎப்கே ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனம், அமெரிக்காவில் கார் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுப்பது சம்பந்தமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதில், இந்திய கார்களை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயது பிரிவினரிடையேயும் நடத்தபப்பட்ட இந்த ஆய்வில் 41 சதவீதம் பேர் இந்திய கார்களை வாங்குவது பற்றி கனவிலும் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதில், ஆறுதல் தரும் விஷயம் ஆய்வில் பங்கு கொண்ட 30 சதவீதம் பேர் இந்திய கார்களை வாங்குவது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களை வாங்குவதற்கே அவர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதற்கடுத்து, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் கொரிய தயாரிப்பு கார்களை வாங்குவதற்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கொரிய தயாரிப்பு கார்கள் என்றால் தரம், விலை குறைந்த கார்கள் என்ற முத்திரை அமெரிக்கர்களிடம் இருந்து வந்தது.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த மனநிலையை கொரிய நிறுவனங்கள் படிப்படியாக மாற்றியுள்ளன. இதனால், ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய கொரிய நிறுவனங்கள் சிறிது வளர்ச்சி கண்டுள்ளன.
இதேபோன்று, அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கார்களை தரம் மற்றும் தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்தால் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற முடியும் என்றும், அதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








