தொழில்நுட்ப பிரச்சினை:எப்-150 பிக்கப் டிரக்குகளை திரும்ப பெறும் ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக எப்-150 பிக்கப் டிரக்குகள் விளங்குகின்றன.கனடா மற்றும் அமெரிக்காவில் எப்-150 பிக்கப் ரக மினி டிரக்குகள் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில், எப்-150 பிக்கப் டிரக்குகளுக்கு போதாத காலம் வந்துள்ளது.
எப்-150 டிரக்குகளில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஒயர்களில் மின்கசிவு ஏற்பட்டு, தேவையில்லாமல் ஏர்பேக்குகள் திடீரென வெளியில் வந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.விபத்துக்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய ஏர்பேக்குகளே விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து தவறாக பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக் மின் ஒயர்களை மாற்று வழியில் பொருத்தி தர ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட எப்-150பிக்கப் டிரக்கில் ஏர்பேக்கிற்கு செல்லும் ஒயரில் மின்கசிவு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து,பிரச்சினையை சரிசெய்து தர 1.44 லட்சம் எப்-150 பிக்கப் டிரக்குகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,பிக்கப் டிரக்குகளை திரும்ப பெறும் பணி வரும் மார்ச் மாதம் துவங்கும்.டீலர்கள் வாயிலாக பிரச்சினைக்குரிய வாகனங்கள் கண்டறியப்பட்டு இலவசமாக சரி செய்து கொடுக்கப்படும்.வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூஸ் கண்ட்ரோல் பொத்தானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்-150 பிக்கப் டிரக்கை ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








