சக்திவாய்ந்த டீசல் ரயில் எஞ்சினை தயாரித்தது இந்தியன் ரயில்வே

உலகின் மிகப்பெரிய ரயில்வேத்துறைகளில் ஒன்றாக திகழும் இந்திய ரயில்வே துறை, ரயில் எஞ்சின் தயாரிப்பில் பல நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது.
இதைக்கருத்தில்க்கொண்டு, நவீன வசதிகளுடன் 5,500 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல்கொண்ட புதிய ரயில் எஞ்சினை ரயில்வே துறை வடிவமைத்துள்ளது. டபிள்யூடிஜி-5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எஞ்சின் ரயில்வே துறையின் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி மையம்(ஆர்டிஎஸ்ஓ) மற்றும் ரயில்வேத்துறையின் டீசல் லோக்கோமோட்டிவ் ஒர்க்ஸ்(டிஎல்டபிள்யூ) ஆகியவை இணைந்து இந்த டீசல் எஞ்சினை வடிவமைத்துள்ளன.
சர்வதேச அளவில் ரயில் எஞ்சின் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் எலக்ட்ரோ மோட்டிவ் டீசல்(இஎம்டி)என்ற நிறுவனம் இந்த ரயில் எஞ்சின் தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த ரயில் எஞ்சின் மற்ற எஞ்சின்களைவிட அதிக இழுவை திறனும், கூடுதல் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். மேலும், நாட்டின் அதிக சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் என்ற பெருமையையும் இந்த எஞ்சின்கள் பெறும்.
மேலும், இஎம்டி நிறுவனம் இந்த எஞ்சின்களுக்கான சர்வீஸ் வசதிகளையும் நாடு தழுவிய அளவில் வழங்க இருக்கிறது. ஹூப்ளி, சபர்மதி, ஜோத்பூர், சிலிகுரி, லக்ணோ, கூட்டி, கிருஷ்ணராஜபுரம், துக்ளகாபாத், புனே, இட்டர்ஸி மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள டீசல் எஞ்சின் பணிமனைகளில் இந்த எஞ்சின்களுக்கான சர்வீஸ் வசதியை இஎம்டி வழங்க இருக்கிறது.
மேலும், கேபினில் குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட முதல் ரயில் எஞ்சினாக வருகிறது. நாடு முழுவதும் ரயில்வே மண்டலங்களில் இந்த நவீன வசதிகொண்ட ரயில் எஞ்சின் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வேத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








