புதிய ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்த டொயோட்டோ திட்டம்

இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில் டொயோட்டோ உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், புதிய ஹைபிரிட் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிலிருந்து வெளிவரும் நிக்கேய் பிசினஸ் டெய்லி என்ற வர்த்தக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அக்வா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் கார் பிரையஸ் ஹைபிரிட் கார் பிளாட்பார்மிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டோ பிரையஸ் கார் 32கிமீ மைலேஜ் கொடுக்கிறது. ஆனால், அதைவிட இந்த கார் கூடுதல் மைலேஜை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரையஸ் ஹைபிரிட் காரை விட இந்த காரை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரவும் டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காரை ஜப்பானில் 22,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10.50 லட்சம்) விலையில் விற்பனை செய்யவும் டொயோட்டோ திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் டொயோட்டோ வரும் 2015ம் ஆண்டுக்குள் 10 ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








