கார் விற்பனை சரிவு: வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் சலுகை மழை

இந்த ஆண்டு துவக்கம் கார் நிறுவனங்களுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்து வந்தது. ஜனவரி, பிப்ரவரியில் கார் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த நிலையி்ல், கார் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, கார் விற்பனையை அதிகரிக்க மார்ச்சில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை சிறப்பு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்கின. இதனால், மார்ச் மற்றும் ஏப்ரலில் கார் விற்பனை ஓரளவு சுறுசுறுப்படைந்தது.
இந்த நிலையில், கடந்த 14ந் தேதி பெட்ரோல் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியது. இதனால், கார் வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளதாக தெரிகிறது. இதன் எதிரொலியால், இந்த மாதம் கார் விற்பனை 10 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது.
இதனால், கலக்கமடைந்துள்ள கார் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளன. மாருதி டீலர் ஒருவர் கூறுகையில்," விற்பனை குறையும் சமயத்தில் சிறப்பு சலுகை திட்டங்கள்தான் விற்பனையை அதிகரிக்க கைகொடுக்கின்றன," என்றார்.
வாடிக்கையாளர்களுக்கு ரூ.60,000 வரை சிறப்பு சலுகைகளை வழங்க கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக டீலர்கள் தெரிவித்தனர். மாருதி, ஹூண்டாய், ஃபியட், ஃபோர்டு, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் சலுகை திட்டங்களை வழங்குகின்றன.
இன்ஸ்யூரன்ஸ் மற்றும் சில உதிரிபாகங்களை இலவசமாக வழங்க ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதேபோன்று, மற்றொரு மார்க்கெட் லீடரான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் கார்களுக்கு ரூ.10,000 கூடுதல் மதிப்பு வழங்க இருப்பதாக டீலர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








