டெல்லி பார்முலா-1 பந்தய டிராக்கில் குறுக்கே நாய் ஓடி வந்ததால் பரபரப்பு

டெல்லி அருகே நொய்டாவில் ரூ.2,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் பார்முலா-1 கார் பந்தய ரேஸ் டிராக்கில் பந்தயங்கள் இன்று காலை முறைப்படி துவங்கின.
அனைத்து பார்முலா-1 அணிகளின் கார்களும் பயிற்சி போட்டியின்போது ஒன்றையொன்று முந்தும் வேகத்தில் ரேஸ் டிராக்கில் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது, தெருநாய் ஒன்று ரேஸ் டிராக்கில் திடீரென தலைதெறிக்க குறுக்கே ஓடி வந்தது. இதைக்கண்ட போட்டி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அங்கு நின்றிருந்த பாதுகாப்பு வாகனத்தில் சென்று அந்த நாயை பிடிக்க விரட்டிச் சென்றனர்.
இருந்தாலும், அந்த நாய் அவர்கள் கையில் அகப்படாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டே அங்கும் இங்குமாக ரேஸ் டிராக்கில் ஓடியது. இறுதியில் சில நிமிட போராட்டத்திற்கு பின் நாயை ஒரு வழியாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, நாய் குறுக்கே ஓடி வந்ததால் கார் டிரைவர்களுக்கு சிவப்பு கொடி காட்டி காரை நிறுத்த சமிக்ஞை கொடுக்கப்பட்டது. இதனால், 5 நிமிடங்கள் பயிற்சி போட்டிகள் பாதிக்கப்பட்டன. பார்முலா-1 ரேஸ் டிராக்கில் நாய் ஓடி வந்தது அங்கு சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications








