ஸ்கூட்டர் தயாரிப்பை மீண்டும் துவக்க பஜாஜ் முடிவு

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியர்களின் கவுரவத்தின் அடையாள சின்னமாக பஜாஜ் ஸ்கூட்டர்கள் கருதப்பட்டன.பஜாஜின் சேட்டாக் மற்றும் சூப்பர் மாடல் ஸ்கூட்டர்கள் ஒரு காலத்தில் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையை ஆக்கிரமித்திருந்தன.
எரிபொருள் சிக்கனம் இல்லாதது,100சிசி பைக்குகளின் மீதான மோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டை இழந்தன.மாதத்திற்கு 100 ஸ்கூட்டர்கள்கூட விற்பனையாகாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து,கடந்த 2007ம் ஆண்டு ஸ்கூட்டர் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில்,கியர் இல்லாத பவர் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மவுசு கூடியுள்ளது.இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் 20சதவீத இடத்தை ஸ்கூட்டர்கள் பிடித்துள்ளன.
இதை கவனத்தில்கொண்ட பஜாஜ் நிறுவனம்,இழந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க திட்டமிட்டுள்ளது.புதிய ஸ்கூட்டர் மாடல்களை தயாரிக்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறிந்து பஜாஜ் ஆட்டோ தலைவர் கூறுகையில்,"அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாதத்திற்கு 20,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மீண்டும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,"என்றார்.


Click it and Unblock the Notifications








