ஜெர்மனி எக்ஸ்பிரஸ் சாலையில் தீப்பிடித்து எரிந்த ஃபெராரி கார்

குறைந்த விலை கார்கள்தான் தீப்பிடித்து எரிந்து வருவாதாக கருதப்படும் நிலையில், பல கோடி மதிப்புடைய ஃபெராரி எப்எப் காரும் தீப்பிடித்து எரிந்துள்ளது உலகம் முழுவதும் உள்ள ஃபெராரி ரசிகர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜெர்மனியில் ஆட்டோபான் என்று கூறப்படும் எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக 44 வயதுடைய ஒருவர் அந்த காரை ஆட்டோபான் எக்ஸ்பிரஸ் சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, காரிலிருந்து திடீரென குபுகுபுவென புகை வந்துள்ளது.
புகை வருவதை கண்டவுடன் காரை ஓட்டிச்சென்றவர் அந்த காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவசரமாக காரிலிருந்து இறங்கிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்த கார் தீப்பிடித்து முழுவதுமாக கருகி எலும்புக்கூடானது.
இந்த சம்பவம் குறித்து ஃபெராரி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதேபோன்று, நெதர்லாந்து நாட்டில் ஒரு ஃபெராரி எப்எப் கார் கியர் பாக்ஸ் பிரச்னையால் பிரேக் டவுண் ஆனதாக தகவல்கள் கூறுகின்றன.
ஃபெராரி கார் தீப்பிடித்து எரிவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே,5 இட்டாலியா கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சமீபத்தில்தான் இந்த எப்எப் சூப்பர் ஹேட்ச்பேக் காரை ஃபெராரி அறிமுகம் செய்தது. இந்த கார் ரூ.3.5 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சூப்பர் கார் ஃபெராரியின் முதல் 4 சீட்டர் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








