உலக டிரக் சந்தையில் முதல் பத்து இடங்களுக்குள் வருவதே இலக்கு-அசோக் லேலண்ட்

ஹிந்துஜா குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்படும் அசோக் லேலண்ட் நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி, உலக சந்தையில் முக்கிய இடம் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது அசோக் லேலண்ட்.
தற்போது, உலக டிரக் சந்தையில் முன்னிலையில் உள்ள 20 டிரக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் அசோக் லேலண்ட், அடுத்து பத்து இடங்களுக்குள் முன்னேற திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் மேலாண் இயக்குனர் கூறியதாவது:
"கடந்த நிதியாண்டில் 94,100 வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இதில், 10,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நடப்பு நிதியாண்டில் 1.20 லட்சம் டிரக்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
உலக சந்தையில் முக்கிய இடம் பிடிப்பதற்கு ஏற்ற வகையில், விற்பனை கொள்கைகளில் மாற்றம் செய்து வருகிறோம். இதற்கு தக்கவாறு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பந்த் நகரிலுள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 26,000 ஆக உள்ளதை 40,000 ஆக உயர்த்தப்படும்.
மேலும், உலகத்தரம் வாய்ந்த வாகன தயாரிப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதன்மூலம், உலகின் முதல் பத்து டிரக் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றாகவும், முதல் ஐந்து பஸ் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் இடம்பிடிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.


Click it and Unblock the Notifications








