அடுத்த ஆண்டு புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டம்

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்வாய்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் சூப்பர் பைக்குகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 1000 சிசி ரக சூப்பர் பைக்குகளை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது.
கடந்த மூன்று மாதங்களில் இதுவரை 15 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், பைக் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு 1000 சிசிக்கும் குறைவான பைக் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
"டெல்லியை சேர்ந்த டச்சு மோட்டார்ஸ் மற்றும் மும்பையை சேர்ந்த நவ்னீத் மோட்டார்ஸ் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை செயல்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை இரு நிறுவனங்களும் சொந்தமாக கவனித்து வருகின்றன.
எஸ்1000ஆர்ஆர், கே1300, ஆர்1300ஜிஎஸ், கே1600ஜிடிஎல், ஆர்1200ஆர் மற்றும் எச்பி2 ஆகிய ஆறு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.18 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் 1000 சிசி ரகத்தை சேர்ந்தவை. அறிமுகம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் இதுவரை 15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 45 பைக்குளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், அடுத்த ஆண்டு 1000 சிசி்க்கும் குறைவான பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








