இறக்குமதி வரி உயர்வு:சென்னை தொழிற்சாலையில் எஞ்சின் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது.
எஞ்சின், கியர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய பாகங்களை ஜெர்மனியிலுள்ள தனது தொழிற்சாலையிலிருந்து இறக்குமதி செய்து சென்னை தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து வந்தது பிஎம்டபிள்யூ. இந்த நிலையி்ல், கடந்த மத்திய பட்ஜெட்டில் கார் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரிவிதிப்பு முறையில் மத்திய அரசு பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதனால், எஞ்சின், கியர் பாக்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத வரி தற்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் புதிய வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், வரி உயர்வை சமாளிக்கும் விதமாக சென்னையிலுள்ள கார் தொழிற்சாலையிலேயே, எஞ்சின் அசெம்பிள் செய்யும் பணிகளையும் துவக்கியுள்ளது பிஎம்டபிள்யூ. தனது 3 மற்றும் 5 சீரிஸ் கார்களுக்கும், எக்ஸ்-1 எஸ்.யூ.வீ. காருக்கும் இங்கு எஞ்சின்கள் அசெம்பிள் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
எஞ்சினுக்கான பாகங்களை தனித்தனியாக இறக்குமதி செய்து அசெம்பிள் செய்வதால், பழையபடி 10 சதவீத வரியே செலுத்துவதால், கார் விலையை ஏற்றும் அவசியம் இருக்காது என்றும் பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








