இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது பிஎம்டபிள்யூ

ரூ.16 லட்சத்திலேயே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க முடியும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிஎம்டபிள்யூ தனது வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு படியாக புதிய கார்கள் மட்டுமின்றி தனது பிராண்டின் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்கும் தொழிலிலும் இறங்கியுள்ளது.
இதனால், பிஎம்டபிள்யூ கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மிகக்குறைந்த விலையில் இனி சொகுசு கார்களை வாங்கிக்கொள்ளும் வாய்ப்பை பெறுவர்.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ தலைவர் ஆன்ட்ரியாஸ் சாப் கூறியதாவது:
"பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையை தற்போது முறைப்படி துவங்கினாலும், ஏற்கனவே சோதனை அடிப்படையில் கார் விற்பனையை துவங்கினோம். சற்றும் எதிர்பாராத வகையில் 400 கார்கள் விற்பனையானது.
இதனால், உடனடியாக யூஸ்டு கார் விற்பனையை துவங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு 1,000 கார்கள் வரை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
மேலும், யூஸ்டு கார் விற்பனை மூலம் எங்கள் மொத்த கார் விற்பனை 10 சதவீதம் அதிகரிக்கும்," என்று கூறினார்.
நாடு முழுவதும் 7 இடங்களில் பிஎம்டபிள்யூ பிரிமியம் செலக்ஷன் என்ற பெயரில் யூஸ்டு கார் ஷோரூம்களை பிஎம்டபிள்யூ திறந்துள்ளது.
ரூ.24 லட்சத்தில் வாங்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ யூஸ்டு காரை ரூ.16 லட்சம் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிஎம்டபிள்யூவின் 24 மணி நேர அவசர உதவி மற்றும் 1.20 லட்சம் கிமீ.,க்கு குறைவாக ஓடியுள்ள கார்களுக்கு 2 ஆண்டுகள் அல்லது காருக்கு 2 லட்சம் கிமீ வரை வாரண்டி ஆகியவற்றையும் பிஎம்டபிள்யூ வழங்குகிறது.
தவிர, தனது சொந்த பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் கடனுதவியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








