டெல்லியில் புல்லட் புரூப் கார் வாடகைக்கு விடும் சேவை துவக்கம்

டெல்லியை சேர்ந்த இசிஓஎஸ் மொபிலிட்டி அன்ட் ஹாஸ்பிடாலிட்டி(ஈக்கோ) என்ற நிறுவனம் டொயோட்டோ பார்ச்சூனர் ஆல் டிரைவ் எஸ்யூவி புல்லட் புரூப் காரை அறிமுகம் செய்து தனது சேவையை துவங்கியுள்ளது.
இந்த புல்லட் புரூப் காருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 80 கிமீ வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற நகரங்களுக்கு புல்லட் புரூப் கார் வாடகைக்கு வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதுகுறித்து ஈக்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லூம்பா கூறியதாவது:
"விஐபி.கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு பல வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களுக்கு நிம்மதியான அதேவேளை பாதுகாப்பான பயணத்தை தரும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக இந்த சேவையை துவங்கியுள்ளோம்.
இது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதுகிறோம். மேலும், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களி்ல் இந்த புல்லட் புரூப் கார் வாடகைக்கு விடும் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 1,000 புல்லட் புரூப் கார்களை வாங்க உள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








