கடந்த ஏப்ரல் மாதம் கார், பைக் விற்பனை படுஜோர்

கார் விற்பனை:
கடந்த ஏப்ரலில் கார் விற்பனை 4.40 சதவீதம் உயர்வு கண்டதாக நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 97,155 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை சிறிது மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 52,020 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 52,058 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதேவேளை, உள்நாட்டு விற்பனை 10.33 சதவீதம் உயர்ந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, நானோ காரின் விற்பனை சூடுபிடித்துள்ளதால், அந்த நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட துவங்கியுள்ளது.
ஏப்ரலில் ஸ்கோடா ஆட்டோவின் கார் விற்பனை 90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 1,285 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த ஏப்ரலில் 2,446 கார்களை விற்பனை செய்துள்ளது.
மோட்டார்சைக்கிள் விற்பனை:
கடந்த மாதம் மோட்டார்சைக்கிள் விற்பனையும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது. நாட்டின் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 17 சதவீத உயர்வை சந்தித்துள்ளது. கடந்த மாதம் 3,67,309 மோட்டார்சைக்கிள்களை அந்த நிறுவனம் விற்றுள்ளது.
யமஹா நிறுவனத்தின் பைக் விற்பனை கடந்த மாதம் 38.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 24,968 பைக்குகளை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 34,476 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
சூஸுகி மோட்டார் நிறுவனத்தின் விற்பனையும் 41 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 20,758 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தநிலையில், இந்த ஆண்டு 29,369 மோட்டார்சைக்கிள்களை விற்றுள்ளது சூஸுகி.
மோட்டார்சைக்கிள் விற்பனை 14 சதவீதம் உயர்ந்ததாக டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 1,47,172 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 1,67,744 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








