ஜப்பான் நிலநடுக்கத்தால் கார் பெயின்ட்டுக்கு தட்டுப்பாடு

கார்களுக்கு பளபளப்பு தன்மையை கொடுப்பதற்காக, பெயின்டுகளில் சிறப்பு நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமூட்டிகள் தயாரிப்பதில், ஜெர்மனியை சேர்ந்த மெர்க் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது.
ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டோ, ஹோண்டா, கிரிஸ்லர் உள்ளிட்ட முதன்மையான கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மெர்க் நிறுவனம் சிறப்பு நிறமூட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. சிரில்லாக் எனப்படும் இந்த பிரத்யேக நிறமூட்டிகள் உலகிலேயே ஜப்பானிலுள்ள மெர்க் தொழிற்சாலையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
மேலும், மெர்க்கின் இந்த நிறமூட்டி தொழிற்சாலை ஜப்பானிலுள்ள புகுஷிமா அணு உலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தநிலையில், அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள அணுக்கதிர்வீச்சு உள்ளிட்ட அசாதாரணமாக சூழ்நிலைகளால் மெர்க நிறுவனத்தின் நிறமூட்டி தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
நிறமூட்டி சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட வண்ணங்களில் கார்களை தயாரிப்பதில் பல்வேறு கார் நிறுவனங்களுக்கு சிக்கல் எழந்துள்ளது. இதையடுத்து, கருப்பு, சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கார்களை முன்பதிவு செய்வதை கார் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
மெர்க் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"கருப்பு வண்ணத்திற்கான இரண்டு நிறமூட்டிகள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் கலக்கப்படும் மூன்று நிறமூட்டிகள் உள்பட பத்து நிறமூட்டிகளை தயாரிப்பது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், உற்பத்தியை துவங்குவது குறித்து எதுவும் கூற இயலாது.
மேலும், வேறு இடத்தில் தொழிற்சாலையை மாற்றி உற்பத்தி துவங்குமாறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆலோசனை தெரிவித்துள்ளன. இதிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆனால், மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்றார்.
ஜப்பான் நிலநடுக்கத்தால், கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கார் பெயின்ட் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், கார் நிறுவனங்களின் உற்பத்தி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








