இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார் விற்பனையில் சரிவு

மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையில் பெருத்த சரிவு காணப்பட்டது. பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வு, புதிய கார்களின் அறிமுகங்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் என கார் விற்பனை குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
மாருதி:
கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த மாதம் 25 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1,00,857 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் வெறும், 75,300 கார்களை மட்டுமே விற்பனை செய்து கால் பங்கு விற்பனையை இழந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ்:
கார் உற்பத்தியில் இரண்டாம் இடமும், ஏற்றுமதியில் முதலிடமும் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்சின் விற்பனை 11 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 28,811 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 25,642 கார்களை விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 38 சதவீதம் அடிவாங்கியுள்ளது. கடந்த ஆண்டு 27,825 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாத்த்தில் வெறும் 17,192 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் 3,260 நானோ கார்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டுடன் இதை ஒப்பிடும்போது 6 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.
இந்தியா கார் மார்க்கெட்டில் மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 80 சதவீத பங்களிப்பை கையில் வைத்துள்ளன. இந்த நிலையில், மூன்று முக்கிய நிறுவனங்களின் விற்பனையும் கடும் சரிவை கண்டுள்ளது.
இருப்பினும், டொயோட்டோ, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனை குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டொயோட்டோ நிறுவனம் 99 சதவீதமும், ஜெனரல் மோட்டார்ஸ் 38 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
வரும் பண்டிகை காலத்தில் ஏராளமான புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், வாடிக்கையாளர்கள் புதிய மாடலை வாங்குவதற்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், புதிய கார்களின் அறிமுகத்திற்கு பின்னர் கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








