பிப்ரவரியில் கார் விற்பனை உயர்வு:முன்னணி நிறுவனங்கள் அறிவிப்பு

மாருதி சுஸுகி இந்தியா விற்பனை:
கார் விற்பனையில் முதலிடம் வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை, பிப்ரவரியில் 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதுதொடர்பாக மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த பிப்ரவரியில் 1,11,645 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் (96,650கார்கள்) இதை ஒப்பிடும்போது, கடந்த மாதம், விற்பனை 15.51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு கார் விற்பனை 19.79 சதவீதம் வளர்ச்சி கண்டபோதிலும், ஏற்றுமதி 15 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு விற்பனை:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபோர்டு நிறுவனம் 3,223 கார்களை விற்பனை செய்திருந்தது.ஆனால், பிகோ கார் வருகையை தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனத்தின் நிலைமை தலைகீழாகிவிட்டது. விற்பனையில் பிகோ கார் சக்கைபோடு போடுவதால் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
கடந்த மாதம் ஃபோர்டு நிறுவனம் 9,293கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது, விற்பனை மும்மடங்கு உயர்வை சந்தித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்:
நாட்டின் முன்னோடி நிறுவனமான டாடா மோட்டார்சிஸ் கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 31,909 கார்களை டாடா மோட்டார் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையை(26,985கார்கள்) ஒப்பிடுகையில், 18.25சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக, அதள பாதாளத்தில் இருந்த நானோ காரின் விற்பனை, விளம்பர யுக்திகளின் அருளால் 101 சதவீதம் எழுச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் 8,262 நானோ கார்கள் விற்பனையாகி உள்ளன. இண்டிகா வரிசை கார்களின் விற்பனையும் 12 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை:
சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதம் 640 கார்களை விற்று 58.81 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். கடந்த ஆண்டு இதே மாதத்தில் பென்ஸ் நிறுவனம் 403 கார்களை விற்பனை செய்திருந்தது.
இதேபோன்று, மற்றொரு சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனத்தின் விற்பனையும், கடந்த மாதம் 56.86 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 306 கார்களை விற்பனை செய்திருந்த ஆடி, கடந்த பிப்ரவரியில் 480 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் விற்பனை:
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தி்ன் விற்பனை மட்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரியில் 54,610 கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் மோட்டார்ஸ், கடந்த பிப்ரவரியில் 52,007 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதை ஒப்பிடும்போது, விற்பனை 5 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது.
அதேவேளை,உள்நாட்டு சந்தையில் விற்பனை 5.25 சதவீதம் உயர்வு கண்டதாக ஹூண்டாய் மோட்டார்ஸ்தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஏற்றுமதியில் 17.92 சதவீதம் சரிவு ஏற்பட்டதால், ஒட்டுமொத்த விற்பனையிலும் சரிவை ஏற்படுத்திவிட்டாதாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








