துபாயில் கார்களுக்கு புத்துணர்வு முகாம்: கட்டணம் ரூ.8 லட்சம்

துபாயை சேர்ந்த மோன்ஸா அல்டிமேட் அன்ட் டீட்டெயிலிங் என்ற நிறுவனம், விலை உயர்ந்த கார்களுக்கு புத்துணர்வு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் கொண்டு வந்துவிடப்படும் விலையுயர்ந்த கார்களுக்கு ஒரு வாரத்திற்கு பல்வேறு வகை புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த கார்களை சாதாரண தண்ணீரில் குளிப்பாட்டப்படுவதில்லை. பிரத்யேக முறையில் தயாரிக்கப்படும் மினரல் வாட்டரில்தான் குளிப்பாட்டுகிறார்கள். அதுவும் நம்மூர் சர்வீஸ் ஸ்டேஷன்கள் போல் முடிந்த அளவுக்கு பிரஷரை கூட்டி தண்ணீரை பீய்ச்சி அடித்து ரணகளப்படுத்துவதில்லை.
காருக்கு இதமாக இருக்கும் வகையில் சரியான வெப்பம், மிதமான பிரஷரில் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டுகிறார்கள். விஷேச கருவிகள் மூலம் மசாஜ் செய்கிறார்கள். இதன்மூலம், நசுங்கிய பகுதிகள், கீறல்களை சரிசெய்கின்றனர்.
இந்த கார் புத்துணர்வு முகாமை நடத்தி வரும் ப்ரடெரிக் ஃபைய்தி கூறியதாவது:
"எனது புத்துணர்வு முகாமுக்கு கார்கள் வந்துவிட்டாலே அவை புதுமையான அனுபவத்தை பெறும். விலை உயர்ந்த கார்களை பெட்ரோல் ஸ்டேஷனில் கொண்டுபோய்விட்டு 10 அல்லது 15 நிமிடத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து காரை இம்சை செய்கின்றனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.
மேலும், கைகளால் காரை கழுவுவதால் பல இடங்களில் தேவையில்லாமல் கீறல்கள் ஏற்படும். இதுபோன்று, கார்களை புண்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களது புத்துணர்வு முகாமுக்கு வரும் கார்கள் இனிமையான அனுபவத்தை பெறுகின்றன.
மேலும், எங்களது நானோ தொழில்நுட்பம் கொண்ட சர்வீஸ் முறையால் காரில் கீறல்கள் விழுந்த பகுதிகளை மூலம் சரிசெய்துவிடுகிறோம்.முன்பைவிட கார் புத்தம் புதுசு போல் பளபளக்கும். இதற்காக, பிரத்யேக மினரல் வாட்டர் மற்றும் கெமிக்கல்களை குறிப்பிட்ட பிரஷரில் பீய்ச்சியடித்து சர்வீஸ் செய்கிறோம். இதனால், காரின் கலர் மங்கிப்போகாது.
ரோல்ஸ்ராய்ஸ், மஸராட்டி, ஃபெராரி, ஜாக்குவார், லம்போர்கினி உள்ளிட்ட கார்களுக்கு மட்டும் நாங்கள் சர்வீஸ் செய்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








