பட்ஜெட்டுக்கு பின் கார் விலை ரூ.25,000வரை உயரும் அபாயம்?

மூலப்பொருட்களின் விலை உயர்வை தாக்குப்பிடிக்க முடியாத கார் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தின. இந்நிலையில், ஓரிரு மாதங்களில் மீண்டும் விலை உயர்வை கையில் எடுக்கும் நிலையில் கார் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
பொருளதார மந்த நிலையால்,கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்களுக்கான கலால் வரியில் மத்திய அரசு சலுகை அளித்து வருகிறது. ஆனால், தற்போது பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவதால், கார்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலால் வரி சலுகையை முற்றிலும் வாபஸ் பெற மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதனால், கார்கள் மீதான கலால் வரி 2சதவீதம் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால், லாபத்தில் நஷ்டமடைந்து வந்த நிறுவனங்கள் கடந்த ஜனவரியில் அறிவித்த விலை உயர்வால் சற்று நிம்மதியடைந்தன.
இந்நிலையில்,மத்திய பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டால்,அந்த வரிச்சுமையை ஏற்க கார் உற்பத்தி நிறுவனங்கள் தயாராக இல்லை. அதை,வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்துவதை தவிர,வேறு வழியே இல்லை என கார் நிறுவனங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஆனால்,விலை உயர்வால் கார் விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் பல கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
கலால் வரிச் சலுகையை மத்திய அரசு திரும்பபெற்றால், மாருதி ஸ்விப்ட், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் ரூ.10,000 வரையும், ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டோ கொரல்லா கார்கள் ரூ.25,000 வரையும் உயரலாம் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








