குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்தும் கேட்டர்ஹாம்

குறைந்த விலையில் சிறிய ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில் பிரிட்டனை சேர்ந்த கேட்டர்ஹாம் நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கேட்டர்ஹாம் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் டோனி பெர்னான்டஸ் என்பவர் வாங்கினார்.
இதைத்தொடர்ந்து, பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளை கேட்டர்ஹாம் துவங்கியுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் தனது ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்தும் பணிகளை கேட்டர்ஹாம் துவங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சீனாவில் தனது ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்திய கேட்டர்ஹாம், அடுத்து இந்தியாவில் தனது ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய எப்எம்சிஜி நிறுவனமான டாபர் நிறுவனம், கேட்டர்ஹாம் கார்களை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது. மேலும், டெல்லி வட்டாரத்தில் தொழிற்சாலை அமைத்து கேட்டர்ஹாம் கார்களை அசெம்பிளிங் செய்யவும் டாபர் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், இறக்குமதி வரியை 100 சதவீதம் தவிர்க்க முடியும் என்பதால் மிகக்குறைந்த விலையில் தனது ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியும் என்று டாபர் கருதுகிறது.
இதுகுறி்தது டாபர் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கவுரவ் பர்மன் கூறியதாவது:
"பார்முலா-1 பந்தயங்கள் துவங்கியுள்ளதால், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான மவுசு வெகுவாக அதிகரிக்கும்.
மேலும், கார் பந்தய ரசிகர்களுக்கு குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கும் வகையில் கேட்டர்ஹாம் கார்களை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய உள்ளோம். எனவே, அடுத்த ஆண்டு மத்தியிலிருந்து கார் விற்பனை துவங்கப்படும்," என்றார்.
கேட்டர்ஹாம் செவன் மற்றும் எஸபி 300 கார்களை விரைவில் அறிமுகம் செய்ய டாபர் திட்டமிட்டுள்ளது. மேலும், ஆட்டோமோட்டிவ் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் நிபுணர் மட் கன்னிங்ஸை இந்திய செயல்பாடுகளை கவனிப்பதற்காக டாபர் நியமித்துள்ளது.
மட் கன்னிங்ஸ் கூறுகையில், "கார் விற்பனை மட்டுமின்றி இந்தியாவில் கார் பந்தயங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், கார் பந்தய ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரேஸ் கார்களை வாடகைக்கு எடுத்து ரேஸ் டிராக்கில் ஓட்டி மகிழும் வாய்ப்பையும் வழங்க உள்ளோம்," என்றார்.
இந்தியாவில் கேட்டர்ஹாம் கார்கள் ரூ.25 லட்சம் முதல் ரூ.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாக டாபர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








