இந்தியாவில் செயிலை அறிமுகப்படுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

இந்திய வாடிக்கையாளர்களின் மனம் விரும்பும் காராக மாருதி ஸ்விப்ட் திகழ்கிறது. காம்பெக்ட் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட் விற்பனையில் ஸ்விப்ட் முன்னிலை வகிக்கிறது.
விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் ஸ்விப்ட் இருந்தாலும் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல நெருக்கடிகளை ஸ்விப்ட் சந்தித்து வருகிறது.
ஹூண்டாய் ஐ-20,ஃபோர்டு பிகோ, புதிய ஸ்கோடா ஃபேபியா மற்றும் எட்டியோஸ் லிவா உள்ளிட்ட ஏராளமான மாடல்களால் ஸ்விப்ட்டுக்கு நெருக்கடி இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்விப்ட்டுக்கு நெருக்கடி கொடுக்க புதிய காம்பெக்ட் ஹேட்ச்பேக் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.
செயில் என்ற பெயரில் வரும் இந்த புதிய கார் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீனப் பிரிவு வடிவமைத்த கார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஏற்கனவே சீன சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் காம்பெக்ட் மார்க்கெட்டில் சரியான காம்பெக்ட் ஹேட்ச்பேக் மாடல் இல்லாமல் தவிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் விரைவில் புதிய செயிலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஏற்கனவே ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் காம்பெக்ட் ஹேட்ச்பேக் ஏவியோ விற்பனையில் மிக மிக பின்தங்கி உள்ளதால், செயிலை கொண்டு வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.
இந்த கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பீட் காரை விட மேலான இடத்தில் நிலை நிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
1.2 லிட்டர் அல்லது 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் செயிலை களமிறக்க ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஃபியட் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்தி புதிய செயில் மார்க்கெட்டுக்கு வரலாம் என்றும் தெரிகிறது.
புதிய செயில் காரின் சோதனை ஓட்டங்களை ஜெனரல் மோட்டார்ஸ் நாடு முழுவதும் நடத்தி வருவதால் விரைவிலேயே செயில் மார்க்கெட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








