டெல்லியில் ஹைபீம் போட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!

டெல்லியில் தற்போது கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில், விதிகளை மீறி நகர எல்லைக்குள் அதிக பிரகாசம் கொண்ட ஹைபீம் விளக்குகளை வாகன ஓட்டிகள் ஒளிரச்செய்து வருவதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதை தடுக்கும் வகையில், கடந்த 8ந் தேதி முதல் 13ந் தேதி வரை டெல்லி போலீசால் இரவு 8 மணிமுதல் 9 மணி வரை டெல்லியின் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கண்களை கூசச்செய்யும் அதிக பிரகாசம் கொண்ட ஹைபீம் ஹெட்லைட்டை ஒளிர விட்டு வந்த 2,924 வாகன ஓட்டிகள் பிடிப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சத்யேந்திரா கர்க் கூறியதாவது:
"ஹைபீம் போட்டு வருவதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, ஓட்டிச்செல்பவருக்கும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக, பனிக்காலங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் ஹைபீம் போட்டுச்செல்வதும் காரணமாகிறது.
இதை தடுக்கும் வகையில், டெல்லி மாநகர எல்லைக்குள் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையில் பிடிப்பட்டவர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, அவர்களுக்கு ஹைபீம் போடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்," என்றார்.
இந்த நிலையில், பிடிபட்ட பெரும்பாலான வாகன ஓட்டிகள் நகர எல்லைக்குள் ஹைபீம் போட்டுச்செல்வது தவறு என்று விதிமுறை இருப்பது எங்களுக்கு தெரியாது என்று அப்பாவியாக தெரிவித்தனர்.
நகர எல்லைகளுக்குள் ஹெட்லைட்டில் ஹைபீம் போடக்கூடாது என்பது டெல்லியில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் பொதுவான விதிமுறையாக பின்பற்றப்படுகிறது. பல் வழித்தடங்கள் கொண்ட நெடுஞ்சாலைகளில் மட்டும் ஹைபீம் பயன்படுத்தலாம் என்பது பொதுவான விதி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications