லேலண்ட்-நிசான் மினிடிரக் சென்னையில் அறிமுகம்

நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம் மினிடிரக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிசான் ஒத்துழைப்புடன் மினிடிரக் தயாரிப்பில் இறங்கியுள்ளது அசோக் லேலண்ட்.
தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பணிகளை நிசானும், உற்பத்தி மற்றும் விற்பனையை அசோக் லேலண்ட்டும் கவனித்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 1.25 டன் இழுவை திறன் கொண்ட டோஸ்ட் என்ற முதல் மினிடிரக்கை அசோக் லேலண்ட்-நிசான் கூட்டு குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட்-நிசான் கூட்டுக்குழுமத்தின் தலைவர் சுமந்திரன் கூறியதாவது:
"பாரத் ஸ்டேஜ் 3 மற்றும் 4 எஞ்சின், பவர் ஸ்டீயரிங், கேபினில் ஏசி வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் டோஸ்ட் மினிடிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டோஸ்ட் இந்திய மினிடிரக் சந்தையில் முக்கிய இடத்தை விரைவாக பிடிக்கும்.
டோஸ்ட் முறைப்படி தற்போது அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும். ஓசூர் தொழிற்சாலையில் டோஸ்ட் மினிடிரக் தயாரிக்கப்படும். டோஸ்ட் தவிர, சிறிய ரக பயணிகள் வாகனத்தையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மேலும் இரண்டு புதிய மினி டிரக்குகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். மினி டிரக் விற்பனைக்காக நாடு முழுவதும் புதிதாக 25 டீலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








