எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு முக்கியத்துவம்: ஐரோப்பிய யூனியன் அறிவுரை

கார்கள் வெளியிடும் கார்பன் புகையால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். தவிர, எரிபொருள் தேவையை சமாளிக்க அரபு நாடுகளையும், மத்திய கிழக்கு நாடுகளையும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உலகின் பல்வேறு நாடுகள் உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையால், உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதன்பின்,உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் கூறியிருப்பதாவது:
"பெட்ரோலிய பொருட்களின் தேவையை சமாளிப்பதற்கு அயல்நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு பேட்டரியில் இயங்கும் கார்களையும், இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் கார்களை தயாரிக்கவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வரும் 2030 ம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் பயன்பாட்டை 50 சதவீதம் குறைக்கும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2050ம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட முயற்சி எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








