வரும் 26ந் தேதி முதல் ஷோரூமை டெல்லியில் திறக்கிறது ஃபெராரி

இதுநாள் வரை ஃபெராரி கார்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக புக்கிங் செய்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. இதில் பல பிரச்சினைகள் இருந்ததை கண்ட பலர், ஃபெராரி கார் வாங்கும் ஆசையை மனதிலேயே போட்டு புதைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை கண்ட ஃபெராரி, இந்திய மார்க்கெட்டில் நுழைந்தால் என்ன? என்று கருதியது. இதற்கான பணிகளை வேகமாக மேற்கொண்ட அந்த நிறுவனம், கார் இறக்குமதியில் கைதேர்ந்த நிறுவனத்தை தனது இந்திய பார்டனராக நியமிக்க முடிவு செய்தது.
பல இந்திய கார் இறக்குமதி நிறுவனங்களின் பட்டியலை அலசி ஆராய்ந்த அந்த நிறுவனம், இறுதியாக ஷ்ரேயான்ஸ் நிறுவனத்தை தனது அங்கீகாரம் பெற்ற இந்திய விற்பனையாளராக நியமித்தது.
மஸராட்டி, போர்ச்சே மற்றும் டுகாட்டி கார்களை இறக்குமதி செய்து வரும் ஷ்ரேயானுக்கு கார் இறக்குமதியில் நல்ல அனுபவம் இருப்பதால் இந்திய சந்தையில் அதிக நம்பிக்கையுடனேயே ஃபெராரி களமிறிங்குகிறது.
இந்த நிலையில், டெல்லியிலுள்ள ஜன்பத் பகுதியில் தனது முதல் ஃபெராரி கார் ஷோரூமை, வரும் 26ந் தேதி ஷ்ரேயான்ஸ் நிறுவனம் திறக்கிறது. இந்த ஷோரூமில் கார் சர்வீஸ் ஸ்டேஷனும், இணைந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சவுகரியமாக இருக்கும். மும்பையில் இரண்டாவது ஃபெராரி கார் ஷோரூம் திறக்க இருப்பதாகவும் ஷ்ரேயான்ஸ் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா ஸ்பைடர் கார் ரூ.2.2 கோடி விலையிலும், 458 இட்டாலியா மாடலுக்கு ரூ.2.56 கோடி விலையும், 599 ஜிடிபி மாடலுக்கு ரூ.3.37 கோடி விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்த ஷ்ரேயான்ஸ், எப்எப் காரை ரூ.4 கோடி விலையில் விற்பனை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








