இந்தியாவில் சூப்பர் கார் டிரைவிங் ஸ்கூல் திறக்க ஃபெராரி விருப்பம்

பார்முலா-1 கார் பந்தயங்கள் மூலம் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதான மோகம் வாடிக்கையாளர் மத்தியில் மட்டுமில்லாது ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தையும் வெகுவாகவே ஈர்த்துள்ளது.
இதனால், உலகின் பல முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்தவும், ஸ்போர்ட்ஸ் கார்களை திறம்பட ஓட்டுவதற்கு ஏதுவாக பயிற்சி அகடமியை திறப்பதிலும் ஆர்வம் தெரிவித்து வருகின்றன.
மேலும், டெல்லி அருகே நொய்டாவில் கட்டப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக்கும் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ரேஸ் டிராக் மூலம் பார்முலா-1 பந்தயங்கள் தவிர, இந்தியாவில் ஏராளமான கார் பந்தயங்கள் நடைபெற வழி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த புதிய ஃபெராரி எப்எப் சூப்பர் கார் அறிமுக விழாவிற்கு ஃபெராரி நிறுவனத்தின் தலைவர் அமீடியோ ஃபெலீசா வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"புதிய எப்எப் கார் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை மற்றொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.
மேலும், பார்முலா-1 பந்தயங்கள் மூலம் இந்தியர்கள் மத்தியில் கார் பந்தயங்கள் மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே, இந்தியாவில் சூப்பர் கார்களுக்கான பயிற்சி அகடமிக்களை திறக்க விரும்புகிறோம். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ரேஸ் டிராக்கில் கார் ஓட்டும் புதிய அனுபவத்தை பெற வைக்க முடியும்.
தவிர, சொந்தமாக புதிய கார் பந்தயத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்களது அணியின் பெர்னான்டோ அலோன்சோ சமீபத்தில் நடந்து முடிந்த பார்முலா-1 பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
இதன்மூலம், எங்களது பிராண்டு இந்தியாவில் வெகுவாக பிரபலமடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது," என்று பெருமிதம் தெரிவித்தார்.
புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் அருகிலேயே தனது புதிய பயிற்சி அகடமியை துவங்க ஃபெராரி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், நொய்டாவில் கட்டப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் ரேஸ் டிராக் ஃபெராரி மட்டுமல்லாது பல்வேறு கார் நிறுவனங்களின் கவனத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
ஃபெராரி போன்றே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இந்தியாவில் விரைவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான பயிற்சி அகடமியை திறக்க உள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








