டெல்லியில் கார்களுக்காக பிரம்மாண்ட கஃபே திறக்கிறது ஃபியட்

தங்களது பிராண்டு கார்களை பிரபலப்படுத்தும் விதமாக கண்காட்சி அரங்கத்துடன் கூடிய ரெஸ்டாரண்ட்கள் போன்ற லாஞ்ச் என்று அழைக்கப்படும் பிரத்யேக ஷோரூம்களை திறக்கின்றன. இதில், விசாலமான இடத்தில் அந்த நிறுவனத்தின் கார் மாடல்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும், ஆங்காங்கே மேஜைகள் போடப்பட்டு விரும்பிய உணவு வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
இதேபோன்று டெல்லியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரம்மாண்ட கஃபே ஷோரூமை திறந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஃபியட் தனது காபி கஃபே ஷோரூமை திறக்க உள்ளது. ஃபியட் கஃபே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரத்யேக ஷோரூமில் ஃபியட் கார்கள் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும்.
அந்த கார்களை சுற்றி போடப்பட்டிருக்கும் சொகுசு இருக்கைகளில் அமர்ந்தவாறே இத்தாலியின் பிரபல உணவு வகைகளை ருசித்தவாறே கார்களின் அழகின் ரசிக்கலாம். மேலும், ஃபியட்டின் வரலாறு அதன் பழைய கார் மாடல்களின் புகைப்படங்கள் ஆகியவையையும் கண்டு ரசிக்கலாம்.
டெல்லியின் கன்னாட் பிளேஸ் அருகில் 40-42 ஜன்பத் என்ற முகவரியில் கட்டப்பட்டு வரும் இந்த பியட் கஃபே வரும் ஜனவரியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கூட்டணியிலிருந்து விலகி விரைவில் தனியாக கார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள ஃபியட் தனது பிராண்டு கார் மாடல்களை பிரபலப்படுத்தும் வகையில் இந்த கஃபேயை திறக்கிறது.


Click it and Unblock the Notifications








