குறைந்த கார்பன் புகை வெளியிடுவதில் ஃபியட் கார்கள் சாதனை

வாகனங்களிலிருந்து வெளிப்படும் கார்பன் புகை சுற்றுச்சூழலுக்கு பெரிதும் தீங்கு ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாகனங்கள் கார்பன் புகை வெளியிடுவது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை பல்வேறு நாட்டு அரசுகள் அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு குறைந்த கார்பன் புகையை வெளியிடுவதில் ஃபியட் நிறுவன முன்னிலை வகிப்பதாக உலகின் முன்னணி ஆட்டோமொபைல் ஆராய்ச்சி நிறுவனமான ஜேட்டோ டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜேட்டோ டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவுது:
"கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஃபியட் கார்கள் சராசரியாக 123.1 g/km அளவு கார்பன் புகையை வெளியிடுவது தெரிந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டின் சராசரி அளவைவிட ஒப்பிடுகையில் 4.7 g/km குறைவாகும். மேலும், மற்ற நிறுவனங்களின் கார்களை ஒப்பிடும்போது ஃபியட் கார்கள் மிகவும் குறைந்த கார்பன் புகையை வெளியிட்டு தரவரிசையில் முன்னிலை பெறுகிறது.
மேலும், ஃபியட்டின் துணை நிறுவனமான ஃபெராரி தயாரிக்கும் ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார்களும் குறைந்த கார்பன் புகையை வெளியிடுவதில் சிறந்து விளங்குகின்றன. இதற்கு ஃபியட்டின் சிறப்பான எஞ்சின் தொழில்நுட்பமே காரணம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கார்பன் புகையை வெளியிடுவது தொடர்பான தரவரிசை பட்டியலில் ஃபியட் கார்கள் தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications