கார்களின் விலையை 3 சதவீதம் உயர்த்துகிறது ஃபோர்டு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளதால் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கார்களுக்கான பெரும்பாலான முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து கார் தயாரிப்பதால் அந்த நிறுவனங்களின் உற்பத்தி செலவீனம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், அந்த நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன. இதை தவிரக்கும் பொருட்டு வெளிநாட்டு கார் நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டோ மற்றும் ஹூண்டாய் ஆகியவை சமீபத்தில் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தன.
இந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும் இணைந்துகொண்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்துவதா ஃபோர்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாக இயக்குனர் நிகேல் வார்க் கூறுகையில்,"கடந்த 3 மாதங்களாக உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் நிலை இருக்கிறது.
எனவே, கார் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வரும் ஆண்டு முதல் கார்களின் விலையை 3 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
தற்போது ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ ஹேட்ச்பேக் கார், பியஸ்ட்டா கிளாசிக், ஆல் நியூ பியஸ்ட்டா மற்றும் எண்டெவர் எஸ்யூவி ஆகிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








