சென்னை தொழிற்சாலையில் ஒரு லட்சம் எஞ்சின் உற்பத்தி-ஃபோர்டு

சென்னை அருகே மறைமலை நகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எஞ்சின் தொழிற்சாலை திறக்கப்பட்டது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் முதல் எஞ்சின் தொழிற்சாலையான இது ரூ.2,250 கோடி முதலீட்டில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் எஞ்சின்களை தயாரிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஃபோர்டு கார்களுக்கு தேவையான ஐந்து வகை ட்யூராடெக் பெட்ரோல் எஞ்சின்களும் மற்றும் ட்யூராடார்க் டீசல் எஞ்சின் மாடல் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆலை செயல்பட துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், ஒரு லட்சம் எஞ்சின்களை தயாரித்து ஃபோர்டு எஞ்சின் ஆலை புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியா துணைத் தலைவரும், எஞ்சின் ஆலையின் தலைவருமான ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
"உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய எஞ்சின் ஆலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 14 மாதங்களில் ஒரு லட்சம் எஞ்சின் உற்பத்தி என்ற புதிய மைல்கல்லை கடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தொழிற்சாலை இன்னும் குறுகிய காலத்தில் அடுத்த ஒரு லட்சம் எஞ்சின்களை தயாரித்து சாதனை படைக்கும். இங்கு தயாரிக்கப்படும் எஞ்சின்கள் உள்நாட்டு சந்தை மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








