ஃப்ரீலேண்டர் காரை இந்தியாவில் அசெம்பிள் செய்ய டாடா முடிவு

பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகிறது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் ப்ரீலேண்டர் எஸ்யூவீ காருக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ஃப்ரீலேண்டர் காரின் விற்பனையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ஃப்ரீலேண்டர் கார் தற்போது பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அதிக இறக்குமதி செலுத்த வேண்டியுள்ளது. எனவே, வரிச்சலுகை பெறும் வகையில் ஃப்ரீலேண்டரை இந்தியாவில் அசெம்பிள் செய்ய டாடா மோட்டார் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குனர் கூறியதாவது:
" ஃப்ரீலேண்டருக்கு இந்தியாவில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதுவரை 200 ஃப்ரீலேண்டர் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. வரிச்சலுகை பெறும் வகையில் காரின் பாகங்களை இறக்குமதி செய்து மஹாராஷ்டிராவிலுள்ள சிக்ளி தொழிற்சாலையில் அசெம்பிளிங் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, சிக்ளி தொழிற்சாலையை ஆண்டுக்கு 2,000 கார்களை தயாரிக்கும் வகையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், இந்திய மார்க்கெட்டில் நிலையான இடத்தை பிடிக்க முடியும். மேலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு இந்த நடவடிக்கை பெரும் ஊக்கம் அளிக்கும்.
ஆனால், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டிலிருந்து கார்களின் முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு புதிய வரிவிதிப்பு முறையை அரசு அறிவித்துள்ளது. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








