புதிதாக 400 பேருக்கு வேலை: ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம், ஹலோல் மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள தலேகான் ஆகிய இடங்களி்ல் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
ரூ.2,200 கோடி முதலீட்டில் இந்த இரண்டு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த விரிவாக்க பணிகளை முடிக்கவும் ஜிஎம் திட்டமிட்டுள்ளது.
ஹலோலில் உள்ள கார் தொழிற்சாலைக்கு புதிதாக 400 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமி்ட்டுள்ளது. தவிர, அடுத்த ஆண்டு விரிவாக்க பணிகள் முடியும்போது மொத்தமாக 1,000 தொழிலாளர்களை நியமிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் கார்ல் சிலிம் கூறியதாவது:
" அடுத்த ஆண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளோம். எனவே, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஹலோல் தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளில் புதிதாக 400 பேரை நியமிக்க உள்ளோம். இதில், பெரும்பாலான தொழிலாளர்கள் கார் உற்பத்தி பிரிவில் பணிக்கு அமர்த்தப்படுவர். மேலும், அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 1,000 பேருக்கு வேலை வழங்க இருக்கிறோம்," என்று கூறினார்.
ஜெனரல் மோட்டார்ஸ் ஹலோல் கார் ஆலையில் தற்போது 1,800 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








